சென்னையில் போலீஸ் ராஜவேலுவை அரிவாளால் வெட்டிய ரவுடி ஆனந்தனன என்கவுன்டர் மூலம் சுட்டு கொன்றது போலீஸ் இந்த சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் சாம்ராஜ்யம் உள்ள பகுதிகள், ஊர்கள் பற்றிய முழு விபரத்தையும் சேகரித்த உளவுத் துறை போலீஸ் நீண்ட பட்டியலை காவல்துறை தலைமையிடம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தென் மாவட்டங்கள், மத்திய திருச்சி மற்றும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் உள்ள ரவுடிகளை கண்டறிய காவல் துறை உத்தரவிட்டுள்ளது. அதே போல் சேலம் தொடங்கி கோவை வரை மேற்கு மண்டலத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலையும் அனுப்ப கோரியுள்ளது காவல்துறை தலைமை.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி என சுமார் 250 ரவுடிகள் பற்றிய விபரங்களை அந்தந்த மாவட்ட போலீசார் திரட்டியுள்ளனர். கொலை சம்பவங்கள், கொள்ளை, ஆள் கடத்தல், அடி, தடி மற்றும் கிரிமினல் செயல்களில் ஈடுபட்ட பழைய மற்றும் தற்போதும் உலாவி வரும் ரவுடிகள் தான் இந்த 250 பேரும் இவர்கள் மீது புதிய வழக்குகள் போடப்பட்டு கைது செய்ய போலீஸ் தீவிரமாக உள்ளது. இதை அறிந்த பல பழைய ரவுடிகள் தலைமறைவாகவும் சிலர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் தஞ்சமடைந்தும் உள்ளார்களாம். எல்லாம் வழக்குகள் மற்றும் என்கவுன்டர் பயம்தான் என்கிறார்கள் ரவுடிகளுக்கு நெருக்கமானவர்கள். இதனிடையே நேற்று ஒரே நாளில் மட்டும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி 40 ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளார்.