இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 65,150 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 6,785 பேருக்கு கரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரேநாளில் 1,299 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 21 ஆவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக சென்னையில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டடோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கும் அளவில், 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,797 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அரசு மருத்துவமனைகளில் 66 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் கரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 6 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 3,320 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 55 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இதுவரை அதிகபட்சமாக சென்னையில் 1,969 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 218 பேரும், திருவள்ளூரில் 193 பேரும், காஞ்சிபுரம் 84, மதுரை 193, ராமநாதபுரம் 53, திருச்சி 55 என உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 5,486 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 424 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 133 பேருக்கு, அதேபோல் கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 92 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் மொத்த பாதிப்பு என்பது 654 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மேலும் 345 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 6,355 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் மட்டும் ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதால் நாளை மாலை 6 மணி முதல் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.