குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-2 பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி (13.09.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14ஆம் தேதி (14.12.2024) பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4 ஆயிரத்து 186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்திற்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாகப் பரிசீலனை செய்தது. அதன்படி இந்த கோரிக்கையினை ஏற்றுக் கடந்த 14ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற கணினி வழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்தது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி (22.02.2025) ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும், பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற தேர்விற்கு வருகைபுரியாத தேர்வர்களும், 22.02.2025 அன்று நடைபெறவுள்ள மறுதேர்வை எழுதலாம் எனத் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.