ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய இரண்டு தாசில்தார்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தன் விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில் சாப்பிடுவதற்காக வேன் நிறுத்தப்பட்டதாகவும், அப்போது விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஓம்காந்தனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்கனவே இடைத்தரகர்கள் 4 பேரிடம் பணம் கொடுத்த தேர்வர்கள் பட்டியலையும் சேகரித்து வருகிறது சிபிசிஐடி.