டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், காவலர்கள் என 33 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்ந்து வெளியாவதால் தனி விசாரணை எஸ்.பி. மல்லிகா தலைமையில் தனி விசாரணை குழு அமைக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நேற்று (06/02/2020) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து டிஎன்பிஎஸ்சி வழக்குகள் அனைத்தும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஜெயக்குமாரை இன்று (07/02/2020) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (07/02/2020) காலை ஆஜர்படுத்தும் வரை ஜெயக்குமாரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சிபிசிஐடி காவலில் செல்ல சம்மதமா? என கேட்டதற்கு தவறு செய்யவில்லை என ஜெயக்குமார் கண்ணீர் விட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிசிஐடி மனு மீது 02.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதன்படி ஜெயக்குமாரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.