தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்காக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை தமிழ் தேர்வும் மதியும் பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 55,071 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில், சென்னை, கடலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வு தொடங்க 30 நிமிடத்திற்கும் மேலாக தாமதமானதால் தேர்வர்கள் அவதியடைந்த நிலையில், எவ்வளவு நேரம் தாமதப்படுத்தப்பட்டதோ அவ்வளவு கூடுதல் நேரமாக வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காலையில் தேர்வு தாமதமாகத் தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்க இருந்த பொதுத்தேர்வு 30 நிமிடம் தாமதமாக 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.