தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எந்தவித அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரும், அவர்களைக் கவனித்துக் கொள்வோரும் Zinc 20mg, வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்தால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம். நிலவேம்பு, கபசுர குடிநீரையும் 10 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறியுள்ள கரோனா நோயாளிகளை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அரசு இத்தகைய முடிவை அறிவித்துள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.