தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கும் நிலையில், இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. பிரச்சாரத்திற்காக வந்த வெளி மாவட்ட கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சொந்த தொகுதிகளில் தலைவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம்!
கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (04/04/2021) தங்களது சொந்த சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலும், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (04/04/2021) நிறைவு செய்கிறார்.