கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைகருத்தில் கொண்டு, ஈரோட்டில் த.மா.கா., இளைஞரணி செயற்குழு கூட்டம், வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின், இளைஞரணி தலைவர் ஈரோடு யுவராஜா கூறும்போது,
''சென்ற 21 நாட்கள் ஊரடங்கால் மக்களும், எங்கள் நிர்வாகிகளும் சந்தித்த இன்னல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இந்திய மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு செய்து வரும் உதவிகள், பணிகள் எல்லாமே தற்காலிகமானதுதான். அவர்களுக்கு, ஆறு மாத காலத்துக்கு தேவையான உதவிகளை செய்ய, மத்திய மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். பொருளாதார ரீதியாகவும், உணவு உத்தரவாதமும் தர வேண்டும்.
மின் கட்டணத்தை உடன் செலுத்த வேண்டும் என்கின்றனர். இதை ஏற்க முடியாது. ஊரடங்கால், யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறும் நிலையில், எப்படி கட்டணம் செலுத்த முடியும்? வீடு, தொழிற்சாலைகள், அனைத்து அலுவலகமும் மூடப்பட்டதால், அனைவர் கையிலும் பணமே இல்லை. உண்மையில் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாது. ஆகவே, வருமான வரிக்கு மூன்று மாதம் விலக்கு கொடுத்ததுபோல, எல்.டி., எச்.டி., யூனிட்களுக்கு வரும், மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்த விலக்கு தர வேண்டும்.
அதுபோல, கல்வி கட்டணத்தையும், மூன்று மாதத்துக்கு பின் செலுத்த அவகாசம் தர வேண்டும். இ.எம்.ஐ.,லோன் செலுத்த அவகாசம் தர வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், வட்டி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் கூறுகிறது. இதுபோன்ற சூழலில், மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் வகையில், அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட வேண்டும். இதுபற்றி, மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் விரிவாக கடிதம் அனுப்ப உள்ளோம்" என்றார்.