கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 45 நாட்களாக எந்தத் தொழிலும் நடக்காததால் கிராமம், நகரங்களில் அடித்தட்டு மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக அவர்களது குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றன. பெண்கள் பணியாற்றி வந்த சிறு தொழில்களும் முடங்கியுள்ளன. இதனைக் கவனத்தில் கொண்டு பெண்கள் தங்களது தொழில்களைத் தொடங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் சுமார் 420 மகளிர் குழுக்கள் இயங்குகின்றனர். இதில் 6,300 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் இந்தியன் வங்கி சார்பில் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 6,300 பெண்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக, மார்ச் 8- ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கடன் உதவியை வழங்கினார். மொத்தம் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையை ஒவ்வொரு வாரமும் கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.