திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலையை இடித்து தரைமட்டம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து கடந்த ஒரு வாரமாக இடித்து வந்தார் பழைய கட்டிடங்கள் இடித்து அவற்றை அப்புறபடுத்தும் தொழில் செய்து வரும் வேலூர் மாவட்டம் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த தமீம் மரைக்காயர்.
அந்த கட்டிடத்தின் கடக்கால் பகுதிகளை தோண்டிய போது அங்கே ஏற்கனவே பார்திக்காக கொட்டப்பட்டிருந்த மணல், கான்கிரீட் மற்றும் கழிவு மண்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளி டிப்பர் லாரி மூலம் வளாகத்தின் உள்ளே கொட்டிக்கொண்டு இருந்தபோது மணல் கொள்ளை நடப்பதாக வருவாய் துறையினருக்கு சிலர் தந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கே நேரடியாக வந்து ஆய்வு செய்துவிட்டு பணியில் ஈடுபடுப்பட்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்ததார் மீது உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியான தமீம் மரைக்காயர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சம்பவ இடத்திற்கு நேர்மையான அதிகாரியை விசாரணைக்காக அனுப்பி உண்மையை கண்டறிந்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ள பொய் புகாரை வாபஸ் பெறவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இயந்திம் மற்றும் வாகனத்தை திருப்பி கொடுக்கவும், தவறான தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடத்தை தரைமட்டம் செய்யும் போது பார்திக்காக கொட்டப்பட்டிருந்த மணல், கான்கிரீட் மற்றும் கழிவு மண்களை எடுத்து அப்புற படுத்திய சம்பவத்தை மணல் கொள்ளை என்று கூறி இயந்திரம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சரியென்றால், இதேபோல் வாணியம்பாடி கச்சேரி சாலை தனியார் தோல் தொழிற்சாலை பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 3 மாதங்களாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. அனுமதியின்றி மணல் விற்ற இடத்தின் உரிமையாளர் மற்றும் மணல் கொள்ளையர்களின் முகவரிகள் தெரிந்தும் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு வருவாய்த்துறை, காவல்துறை மீது வைக்கின்றனர் இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூக நலத்துறையினர்.