தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் கள்ள மார்க்கெட்டில் சரக்கு பாட்டில்கள் விற்பனை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது அதுவும் தீர்ந்துபோன நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் உள்ள குடிமகன்கள் பார்வை தற்போது கள்ளச்சாராயம் பக்கம் திரும்பியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பலயிடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் உத்தரவின் கீழ், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மது அமலாக்கப் பிரிவு மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது கள்ளச்சாராயம் விற்பது உறுதியானதை அடுத்து, அந்த செயலில் ஈடுபட்ட 29 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் 20 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2000 லிட்டர்க்கு மேல் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெய்டுக்கு சென்ற இடத்தில் 1000 லிட்டர் சாராய ஊரல்களை அழித்துவிட்டு வந்துள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ச்சியாக ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் காவல்துறையினர்.