திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்காவில் உள்ள அபிகிரிபட்டறை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஆம்பூர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில் அ.தி.மு.கவிலும் உள்ளார். அ.தி.மு.க பிரமுகர்களுடன் நெருக்கமாக இருப்பதால் இவரை அப்பகுதி மக்கள் பெரிய ஆள் என நம்பியுள்ளனர்.
அப்படி நம்பியவர்களிடம் நர்ஸ் வேலை வாங்கித் தருகிறேன், டீச்சர் வேலை வாங்கித் தருகிறேன், சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருகிறேன், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என ரேட் பேசி லட்சங்களில் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுப்பற்றி பாதிக்கப்பட்ட சிலர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த கட்டகுண்டா கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் மனைவி ஷில்பா, சத்துணவு அமைப்பாளார் வேலை வாங்கித்தருகிறேன், இதற்காக அதிகாரிகளுக்கு தரவேண்டும் ரூ.4 லட்ச ரூபாய் செலவாகும் எனச்சொல்லி ரூ.1 லட்சம், அட்வான்ஸ் கேட்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடன் வாங்கி தந்தோம். இதுநாள் வரை வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் தரவில்லை என புகார் அனுப்பியுள்ளார். முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து பேசியபோது, நான் குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சம் ரூபாய் வாங்கினேன் திருப்பி தந்துவிடுகிறேன் என பத்திரத்தில் எழுதி கையெழுத்துபோட்டு தந்தார். ஆனாலும் பணம் தரவில்லை, கேட்டால் நான் பிராடு தான், உன் பணத்தை ஏமாத்திட்டன்னு வச்சிக்க, தரமுடியாது, உன்னால் முடிஞ்சதை பார்த்துக்க என கேவலமாக பேசுகிறார் என புகார் அனுப்பியுள்ளார்.
அரங்கல்துருகம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மனைவி ஜான்சிராணி, அரசாங்க வேலை வாங்கி தருகிறேன் எனச்சொல்லி அதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகும் எனச்சொல்லி 2018 மார்ச் மாதம் 1 லட்ச ரூபாய் குமார் வாங்கி சென்றார். இந்த நிமிடம் வரை வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. என் உறவினர்கள் அவரை அழைத்து பேசியபோது, குடும்ப செலவுக்காக பணம் வாங்கினேன், தந்துவிடுகிறேன் எனச்சொல்லி பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு சென்றார். 2 ஆண்டுகளாகிவிட்டது, இப்போது வரை பணத்தைத் தரவில்லை என புகார் அனுப்பியுள்ளார்.
பழைய அரங்கல்துருகத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் அனுப்பியுள்ள புகாரில், என் மகள் திவ்யபாரதி எம்.எஸ்.சி, பி.எட் படித்துள்ளார். அவருக்கு, நகராட்சி ஆணையாளர் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனச்சொல்லி 2018ல் அவரது வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம், பின்பு ரூ.1 லட்சம் என 2 லட்ச ரூபாய் தந்தேன். இப்போது வரை வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என புகார் தந்துள்ளார்.
இதுப்பற்றி ஆம்பூர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தந்தபோது, தனது அரசியல் செல்வாக்கை காட்டி தப்பிவிடுகிறாறாம், போலீஸ்சும் நடவடிக்கை எடுக்கமறுக்கிறதாம், இதனால் மாவட்ட எஸ்.பிக்கு புகார் அனுப்பியுள்ளோம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.