திருப்பத்தூர் மாவட்டத்தில் 28 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் உட்பட 18 நபர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர். மேலும் 10 நபர்கள் வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,182 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 28 நபர்களுக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்னும் 204 நபர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் பின்னர் தெரியவரும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து 1,744 நபர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ள நிலையில் சுமார் 942 நபர்கள் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 245 நபர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 தனிமைப்படுத்தப்படும் சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமலிருக்க பல்வேறு நடைவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது எனத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்.