Skip to main content

நெல்லை: போலீஸ் ஸ்டேஷன் முன்பு 'வெடிகுண்டு' வீச்சு!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

tirunelveli police station incident

 

நெல்லை மாநகரத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி. அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான். இவர், தனது முன்ஜாமீன் தொடர்பாக காலை 10.30 மணியளவில் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்திருக்கிறார். கண்ணபிரானுக்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் முன்பகை இருந்திருக்கிறது. அதன் காரணமாக தனது கூட்டாளிகள் 5 பேர் பாதுகாப்புடன் காவல் நிலையம் வந்த கண்ணபிரான், அங்கே கையெழுத்திட்டுக் கொண்டிருந்த நேரத்தில், காவல் நிலையத்திற்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் காவல் நிலையம் பரபரப்பானது.

 

காவலர்கள் வெளியேவந்து தேடியபோது வெடிகுண்டு வீச்சாளர்கள் தப்பியிருந்தனர். அடுத்தடுத்து வீசப்பட்ட மூன்று வெடிகுண்டு வீச்சில் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் கிங்ஸ்டன் உள்பட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. வெடித்த நாட்டு வெடிகுண்டைச் சோதனையிட்டபோது, அது கோவில் திருவிழாவில் பயன்படுத்துகிற வகையைச் சேர்ந்தது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். 

 

tirunelveli police station incident

 

இது குறித்து நெல்லை மாநகர டி.சி.யான சரவணனிடம் பேசியதில், "குற்றவாளிகள் வந்த மூன்று பைக்குகளின் பதிவு எண்களும், சி.சி.டி.வி. ஃபுட்டேஜில் பதிவாகியிருக்கிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 'கண்ணபிரான் தன் எதிராளிகளால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்றிருக்கிறார். அடையாளம் தெரியாத 8 பேர் என்று ஃஎப்.ஐ.ஆர்.போடப்பட்டுள்ளது, விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்" என்றார். 

 

காவல்நிலையம் முன்பு பட்டப்பகலில் வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சால் மாநகரம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்