தீப்பிடிச்சி எரியுதய்யா...
- கோவை ரதிதேவி
கைநாட்டு எல்லாமும்
கையெழுத்தா மாறனும்ன்னு
பெருந்தலைவர் காமராசர்
பெருசாக் கனவுகண்டார்.
கைநாட்டுக்கு பிறந்த
எங்களுயிர்த் தமிழ்த்தங்கை
குடும்பத்தின் தலையெழுத்தை
திருத்தத்தான் கனவுகண்டா..
சிம்னி விளக்கொளியில்
சிதறாமப் படிச்சதனால்
அம்மணியின் மதிப்பெண்
அதிகமா ஆச்சுதம்மா..
மருத்துவரா ஆகனும்ன்னு
மவராசி ஆசைபட்டா
’நீட்’டெழுதி வந்தாத்தான்
நீபடிக்க முடியுமுன்னு
மோடிவித்தை ஆட்சி
முழுசாச் சொல்லிடிச்சி
கூடிவரும் நேரத்தில்
குடமுடைஞ்ச கதையான்னு
மனமொடிஞ்ச தங்கச்சி
மனசைத் தேத்திக்கிட்டு
திருச்சிக்கு வந்து
நீட்டெழுதிப் பார்த்தா...
எல்லோருக்கும் போலவே
எல்லாமே குழப்பம்தான்.
செல்லக் கிளிமகளும்
நீட்டெழுதித் தோத்துட்டா
நீட்டே வேண்டாமுன்னு
நாடே எதிர்ப்பதுபோல்
சின்னஞ் சிறுகுயிலும்
நீதிமன்றம் போய்நின்னா...
நேயமிக்க மகளுக்கும்
நீதி கிடைக்கலையே
சாயம்போன சர்க்காரால்
சஞ்சலமாப் பரிதவிச்சா...
சேர்த்துவச்ச கனவெல்லாம்
சிதறித் தெறிச்சிடுச்சி...
பார்த்துவச்ச கற்பனையோ
பாதி உசுர் ஆயிடிச்சி
இதுக்கும் மேலஎன்ன
இருக்குன்னு நினைச்சுப்புட்டா
சிறகொடிஞ்ச செல்லக்கிளி
உத்தரத்தில் தொங்கிப்புட்டா...
பாவிமக சாகுறப்ப
என்னென்ன நெனைச்சாலோ?
ஆவிபிரியும் போது
ஆள்றவனை சபிச்சாளோ?
திக்கெல்லாம் இங்கே
தீப்பத்தி எரியுதய்யா...
வெக்கங்கெட்ட அதிகாரம்
வேடிக்கை பார்க்குதய்யா...
ஏழைபாளை கண்ணீரு
மோசமான ஆயுதமாம்.
தர்மமெனும் தேவதையே
வெறிபுடிச்சி நிக்கிறாய்யா...
அனிதாவை சாகடிச்ச
அதிகாரப் பொறுக்கிகளே
தேர்தலொன்னு வரும்போது
தீர்ப்பெழுதக் காத்திருக்கோம்.