விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக எழுத்தர் லஞ்ச புகாரில் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் அருகில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ்(30). இவரது தாய் கலைமணி பெயருக்கு 2007ஆம் ஆண்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இந்த பட்டாவை திருத்தம் செய்வதற்காக யுவராஜ், வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், திருத்தம் செய்வதற்காக பதிவறையில் உள்ள கணக்கு புத்தகத்தை வாங்கி வருமாறு யுவராஜிடம் கூறியுள்ளனர். அந்தக் கணக்கு புத்தகத்தை எடுத்துக் கொடுப்பதற்கு பதிவறை எழுத்தரான சிவஞான வேலு (48), யுவராஜிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
யுவராஜ், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய 5000 ரூபாயை எழுத்தர் சிவஞான வேலிடம் யுவராஜ் கொடுத்துள்ளார். அந்த சமயம், வட்டாட்சியர் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிவஞான வேலுவை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் இது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இதையடுத்து சிவஞான வேலுவை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.