திருநெல்வேலியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணின் மீது சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கல் பெயர்ந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறுக்கான தனிப்பிரிவில் பிரசவம் பார்க்கப்படுகிறது. சுகப்பிரசவம் அல்லாது அறுவை சிகிச்சை என்றால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடப்படுவார்கள். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிஸ்மி என்ற பெண்ணுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் தாயும் சேயும் படுக்கையிலிருந்த நிலையில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் பெயர்ந்து பெண் மீது விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தையின் மேல் டைல்ஸ் விழாமல் தாய் பிஸ்மியின் கால்மீது டைல்ஸ் விழுந்தது. அவருக்கு உதவியாக அங்கே இருந்த உறவினர் பெண் மீதும் டைல்ஸ் விழுந்துள்ளது. உடனடியாக தகவல் அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து பேட்டையில் அமைந்துள்ள அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு வந்த அதிகாரிகள், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதனைத் தொடர்ந்து பிஸ்மியும் அப்பெண்ணின் உதவியாளராக இருந்த உறவினர் பெண்ணும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.