நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர். இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ள இப்புலியைப் பிடிக்க அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறை சார்பில் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்கும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மரங்களின் மீது பரண்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. அதேபோல் இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். தேடுதல் வேட்டையின் முதல் இரண்டு நாட்கள் வனத்துறையினரின் கண்ணில் பட்ட புலி, அதன்பின் வனத்துறை கண்ணில் சிக்கவில்லை.
இதனால் ஒருவேளை 'டி23' இறந்திருக்கலாம் என வனத்துறை கருதியது. புலியின் ஆயுட்காலம் 14 வருடங்கள் என்ற நிலையில், 'டி23' புலிக்கு 13 வயது ஆகிறது. அதேபோல் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி ஒருவேளை இறந்திருக்கலாம் என வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இப்புலியைக் கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் 8 நாட்களுக்குப் பிறகு ஒம்பெட்டா வனப்பகுதியில் 'டி23' புலியின் உருவம் பதிவாகியுள்ளது. மீண்டும் புலி, தேவன் எஸ்டேட், மேல் பீல்டு பகுதிக்கு வரலாம் எனக் கணித்துள்ள வனத்துறை, போஸ்பேரா விரைந்துள்ளது.