கடந்த ஜூலை 22ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தாமாக கோவை வந்துள்ளார். தனது பணியை முடித்து விட்டு அன்று மதியமே தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் மாரியம்மாள்.
அப்போது ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பத்மகுமார் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு மாரியம்மாள் டிக்கெட்டானது கணவரிடம் உள்ளது என்றும், அவர் முன்னே உள்ள இரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியுள்ளார். மாரியம்மாள் டிக்கெட் பரிசோதகரிடம் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன் என சொன்னபோது பத்மகுமார் அவரை அநாகரீக வார்த்தையில் பேசி அவர் கொண்டு வந்த பாத்திரங்களை எட்டி உதைத்ததாக தெரிய வருகிறது.
இதைக் கண்ட பணியில் இருந்த ஆர்பிஎப் தலைமை காவலர் வீரமுத்து பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இது தவறான செயல் எனவும், இது நமது பணியல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பத்மகுமார் எனக்கு அறிவுரை சொல்கிறாயா என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரயில்வே காவலருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. ஆனால் பெண் பயணி என்றுகூட பாராமல் பொதுஇடத்தில் மனிதநேயமற்ற முறையில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக டிக்கெட் பரிசோதகரின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட தலைமை காவலர் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர் வீரமுத்து பணியில் அமர்ந்தது முதல் 25 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து உள்ளார். அதேபோல ரயில் நிலையத்தில் கீழே கிடந்த 12,500 ரூபாய் ,1500 ரூபாய் என விலை உயர்ந்த 9 செல்போன்கள், சுமார் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் மதிப்புடைய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து நற்பெயர் பெற்றுள்ளார்.
இப்படி ரயில்வேதுறைக்கும், காவல்துறைக்கும் நற்பெயர் எடுத்துக் கொடுத்து வந்த இந்த காவலர் மனிதநேயத்தோடு அநியாயத்தை தட்டிக் கேட்டதால் அவருக்கு ரயில்வேதுறை மறைமுகமாக மதுரை டிவிசனுக்கு இடமாற்றத்தை பரிசாக வழங்கி உள்ளது.