Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை...! கார் டிரைவர் கைது..!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

three members passes away one family car driver arrested

 

சென்னை படப்பை அடுத்துள்ள நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மூங்கிலான் இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு செந்தில்குமார் ராஜ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் அரசு ஒப்பந்ததாரராக கட்டுமான பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும்  தந்தை மூங்கிலான் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் ராஜ்குமாருக்கு அதிக மதிப்புள்ள சொத்துக்கள் கொடுத்துள்ளது கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இதுகுறித்து தன்னிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவந்த ராஜேஷ் கண்ணன் என்பவருடன் ஆலோசனை செய்துள்ளார். செந்தில்குமார், கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் சேர்ந்து தனது தம்பி ராஜ்குமாரை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில்குமார் சிறையில் இருந்தபோது செந்தில்குமாரின் மனைவி மேனகாவுக்கும் கார் டிரைவர் ராஜேஷ்கண்ணனுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. 


இந்தத் தகவல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த செந்தில்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மனைவி மேனகாவுக்கும் செந்தில்குமாருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் மேனகாவின் தந்தை அருண் ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். 


அதன்படி கடந்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த செந்தில்குமாரிடம் தங்கள் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக சமாதானம் பேச வேண்டும் என்று அவரது மாமனார் அருண் மற்றும் ராஜேஷ் கண்ணன் இவரது நண்பர் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கலில் உள்ள அருணின் விவசாய நிலத்திற்கு செந்தில் குமாரை வரவழைத்துள்ளனர்.
 

அவரிடம்  சமாதானம் பேசுவது போன்று நடித்து செந்தில்குமாரை கொலை செய்துள்ளனர். அவரது உடலை அங்கேயே நிலத்தில் புதைத்துள்ளனர். செந்தில்குமாரின் உடலை புதைப்பதற்கு ஹரி கிருஷ்ணன் மற்றும் சவுட்டூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு செந்தில் குமாரின் தந்தை மூங்கிலான் சொத்துக்காக தனது மனைவி பத்மினியை 2018 ஆம் ஆண்டே கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து  மூன்று நாட்களில்  பத்மினியை மீட்டுள்ளனர். இதையடுத்து அதே ஆண்டு தனது மருமகளும் செந்தில்குமாரின் மனைவியுமான மேனாகவையும் மூங்கிலான் அயனாவரத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்போது அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேனகாவையும் மீட்டுள்ளனர். 
 

இந்த நிலையில் மேனகாவை கடத்திய மூங்கிலான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜேஷ் கண்ணன், மூங்கிலானை கடந்த 2018ம் ஆண்டே கொலை செய்துள்ளார்.  இந்தநிலையில் பத்மினி கடத்தல் வழக்கில் ராஜேஷ் கன்னாவை போலீசார் சேர்த்துள்ளனர். இதில் ராஜேஷ் கன்னாவை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமாரின் தாயார் பத்மினி தனது மகன் செந்தில்குமாரை காணவில்லை என்று ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 


செந்தில்குமார் காணாமல்போன விஷயத்தில்  கார் டிரைவர்  ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் ராஜேஷ் கண்ணனை  விசாரணை செய்ததில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை மூங்கிலானையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷ் கண்ணா செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல்துறை உதவியுடன் செஞ்சி தாசில்தார் ராஜன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பசுமலை கிராமத்தில் உள்ள அருணின் விவசாயி நிலத்தில் செந்தில்குமார் சடலத்தை தோண்டி எடுத்தனர். இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரி கிருஷ்ணன், செந்தில்குமார் உடலை புதைக்க பள்ளம் தோண்டிய காசிநாதன் மற்றும் ஆலம்பூண்டி அருள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற உறவுக்காகவும் சொத்துக்காகவும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்