வடகிழக்குப் பருவமழை ஆரம்ப நேரத்திலேயே வீரியமாகக் கொட்டத் தொடங்கியிருக்கிறது. நவ. 2ஆம் தேதி முதல் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதனை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை கொட்டியதால் மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கெடுத்தன. ஆற்றுப்புறங்களும் கரை புரள்கின்றன.
மாவட்டத்தின் கடையநல்லூர் மலைப் பகுதியான திரிகூடபுரம் பெரிய நாயகம் கோவில் பகுதி பெரியாற்றுப் படுகையில் பெருக்கெடுத்த மலைக் காட்டாற்று வெள்ளத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் சிக்கினர். விவசாயப் பணிக்காகச் சென்று வெள்ளத்தில் தவித்த இவர்களை மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் அலுவலர் கவிதா தலைமையிலான மீட்புக்குழு வெள்ளப் பகுதிகளில் கயிறு கட்டி அவர்களைப் பத்திரமாக மீட்டனர். பொது மக்கள் இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
தொடர்ந்து மலைப் பகுதியின் கல்லாறு, சின்னாறு போன்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரியாற்றுடன் இணைந்ததால் ஆற்றில் குளிக்கவும், விவசாயம் மற்றும் பிற பணிகளுக்காகச் சென்ற பலர் இதில் சிக்கிக்கொண்டு தவித்த தகவல் மாவட்டக் காவல்துறைக்குச் செல்ல, தென்காசி மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜ், ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் பிற பகுதி காவல் நிலையப் போலீசார், தீயணைப்பு படையினர் துரிதமாகச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் அதிகமானதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேரிடர் மேலாண்மைத் துறையினரும் இணைந்து செயல்பட்டனர். நிமிடத்திற்கு நிமிடம் வெள்ளப் பெருக்கு அதிகமானதால் மீட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வர முடியாமல் தவித்த நேரத்தில், மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பெரிய ஆற்றுப் படுகையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி மாற்றுப் பாதை வழியாக காசிதர்மம் வழியாக மீட்ட மக்களை டிராக்டர்களிலும், ஜீப்களிலுமாகப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தனர். நிரம்பிய கருப்பாநதி அணை திறப்பால் வெள்ளப் பெருக்கெடுத்த பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் அங்கும் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினார்.