Skip to main content

தாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை! 

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
d

 

கடலூர் மாவட்டம்  தொழுதூரிலுள்ள  டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.   

 

கல்விக்குழும தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜன், பள்ளிகளின் தாளாளர் பூங்கொடி ராஜபிரதாபன்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். 

 

அவர் பேசும்போது,  " நேற்றைய வரலாறு தெரியாமல் போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை நம் வசம் இல்லாமல் போகும்.  இன்றைய என்னுடைய நிலைக்கு காரணம் கல்வி மட்டுமே. இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியாளர்கள் செல்வந்த குடும்பங்களில்  பிறந்தவர்களில்லை. மிகச்சிறந்த கல்விக்கூடங்களில் படித்தவர்களுமில்லை. கிராமங்களில், சாதாரண குடும்பங்களில் பிறந்து தாய்மொழியில் படித்தவர்கள்தான்  அதிகம் வென்றிருக்கிறார்கள். திறமையானவர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது. சாதித்தால் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. சந்திராயன் மற்றும் மங்கள்யான் மூலம் பெற்ற வெற்றிகளே அதற்கு சான்று. எதற்கு நிலவு மற்றும் செவ்வாய்க்கு பயணம் என்று கேட்டவர்கள், இன்று இந்தியர்கள் எப்போது நிலவிலும், செவ்வாயிலும் கால்பதிப்பார்கள் என்று கேட்கிறார்கள். சாதிக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் அதிகம் என்று உணருங்கள். பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்பது செய்தி, ஆனால் பல வேலைகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதே உண்மை. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் வள்ளுவர், 'கனவு காணுங்கள்' என்றார் கலாம், 'நன்று கருது நாளெல்லாம் வினை செய், நினைத்தது முடியும்' என்றார் பாரதி. பெரிதாய் வளரும் கனவுகளுடன், நாளெல்லாம் உழைக்கும் ஒருமைப்பாட்டுடன் பட்டங்களை வாங்கிச் செல்லுங்கள்"  என்றார். 

 

ஸோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி பேசுகையில்,  " பள்ளி, கல்லுாரி அடுத்தது வேலை என ஓடிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் இளைப்பாறுங்கள். என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடுங்கள். இப்போது நாம் எங்கிருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.  


 

சார்ந்த செய்திகள்