Skip to main content

காட்டுக்குள் செல்பவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும்...! - கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

Published on 18/12/2020 | Edited on 19/12/2020

 

erode

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில், கோபிசெட்டிபாளையம் மாவட்ட அலுவலகத்தில் 18/12/2020 அன்று நடைபெற்றது.

 

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம் மற்றும் தாளவாடி, சத்தி, பவானிசாகர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர், பரகூர், பவானி, அந்தியூர் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
 

"வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி வழங்க வேண்டும்!

 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பருவகால பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு 17-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வன விலங்குகள் நடமாட்டத்தைப் பல்வேறு வகைகளில் கணக்கிடுவார்கள்.

 

முதல் நாளான நேற்று மாலை, சுமார் நான்கு மணியளவில், சத்தி வனக்கோட்டம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மோயாறு ஆற்றையொட்டிய பகுதியி்ல் கணக்கெடுப்பை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காட்டு யானையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமுற்றுள்ளார்.

 

கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த வனக்காவலர் சதீஷ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தன்னார்வலர் முத்து பிரபாகர சேரபாண்டியன் ஆகிய இருவரும் கொடூரமாக யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

மற்றொரு வனக்காவலர் பொன்.கணேசன் படுகாயமுற்று கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேட்டைத் தடுப்புக் காவலர் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கொடூர விலங்குகளுக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிகின்றனர்.

 

வனவிலங்கு தாக்குதலுக்குள்ளானால், அதைப்பற்றி வெளியிடத்திற்குத் தெரியப்படுத்தவோ, முதலுதவிக்குக் கூட வாய்ப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர். கொடூர விலங்குகளுக்கிடையில் அடர்ந்த வனப்பகுதியில் உயிருக்கு எந்நேரமும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் உள்ள ஊழியர்களை நிராயுதபாணிகளாகப் பணியாற்ற வைப்பது, சற்றும் மனிதாபிமானமற்றது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும்.

 

cnc

 

ஆகவே, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து வன ஊழியர்களுக்கும் தற்காப்பிற்காக, துப்பாக்கி வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதேபோல் ஐந்தாண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வேட்டை தடுப்புக் காவலர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். உயிரிழந்த வனப்பணியாளர் மற்றும் தன்னார்வலர் குடும்பத்திற்குத் தலா 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்குவதோடு இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்