விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து பெண்களிடம் செயின் பறிப்பது, வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது என தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 11ஆம் தேதி இரவு திண்டிவனம் அருகில் உள்ள வெள்ளிமேடு பேட்டை கீழ் மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனது கணவர் சிவக்குமாருடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அதன்பின் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 13 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுபோன்ற தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் அமைக்கப்பட்ட அந்த தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் தீவனூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், குருமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(26), லோகநாதன்(20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திண்டிவனம் வெள்ளிமேடு பேட்டை மயிலம் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.