தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகரில் கொற்கை விலக்கு அருகில் வாடகை வீட்டில் குடியிருக்கும் முருகவேல் (40), அங்கு டூவீலர் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். தாட்டியமாகப் பேசும் குணம் கொண்ட முருகவேலின் சொந்த ஊர் ஆறுமுகமங்கலம் அருகிலுள்ள தீப்பாச்சி கிராமம்.
நேற்றிரவு முருகவேல் சுமார் ஏழுமணியளவில் ஏரல் சாலையில் பானிபூரி விற்பவரிடம் போதையில் பானிபூரி கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.ஐ. பாலுவும் போலீஸ்காரர்களும் முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதையடுத்து முருகவேல் வீட்டிற்குப் போயிருக்கிறார். இந்த நிலையில் இரவு 10 மணி வாக்கில் பஸ் நிலையத்தின் ஓட்டல் ஒன்றில் தகராறு நடப்பதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வர, எஸ்.ஐ. பாலுவும் உடன் போலீசாரும் அந்தக் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது பானிபூரிகாரரிடம் தகராறு செய்த முருகவேல், டிபன் பொருட்டு ஓட்டலில் தகராறு செய்தது தெரியவர, முருகவேலையும் அவர் வந்த லோடு ஆட்டோவுவையும் காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார் எஸ்.ஐ.பாலு.
அங்கு நடந்த விசாரணையில் முருகவேல் போதையிலிருப்பது தெரியவர அவரை காலையில் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அனுப்பிய எஸ்.ஐ. பாலு, அவரது லோடு ஆட்டோவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். லோடு ஆட்டோவைப் பிடித்துக்கொண்ட ஆத்திரத்தில் முருகவேல் வீடு திரும்பியிருக்கிறார்.
இதனிடையே இரவு 12 மணிக்கு மேல் வழக்கம் போல் நைட் ரவுண்ட்ஸ் சென்ற எஸ்.ஐ. பாலு, தனது டூவீலரில் தலைமைக் காவலர் பொன் சுப்பையாவுடன் சென்றிருக்கிறார். பஜாரில் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு, இரவு ஒருமணியளவில் எஸ்.ஐ. பாலு, கொற்கை விலக்கு பக்கமுள்ள வீட்டின் முன் தொட்டி ஆட்டோவுடன் ஒருவர் நிற்பதைப் பார்த்து அங்கேவர, அந்த வீட்டின் முன், மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு காரணமான முருகவேல் நின்றிருக்கிறார். ''வீட்டுக்குப் போகவில்லையா. ஏன் இந்த நேரத்தில் இங்க நிக்கிற'' என்று எஸ்.ஐ.பாலு கேட்டபோது, தனது வீட்டின் சொந்தக்காரரின் தொட்டி ஆட்டோவிலிருந்த முருகவேல், ''என்னோட ஒர்க் ஷாப்பைத் திறக்கப் போகிறேன்'' என்று அவர்களிடம் சொல்ல, அவரை வீட்டுக்குப் போகச் சொல்லி கண்டித்த எஸ்.ஐ.பாலுவும் தலைமைக் காவலரும் அந்த இரவில் ஸ்டேஷன் திரும்பியிருக்கின்றனர்.
இரண்டு சம்பவத்தில் தன்னை எஸ்.ஐ. கண்டித்ததோடு தனது ஆட்டோவையும் பிடுங்கிக்கொண்ட ஆத்திரத்தில் அந்த தொட்டி ஆட்டோவில், எஸ்.ஐ. பாலுவைப் பின் தொடர்ந்த முருகவேல், வேகமாகச் சென்று எஸ்.ஐ. பாலு சென்றுகொண்டிருந்த பைக்கின் பின்னே மோதித் தள்ளியிருக்கிறான். மோதிய வேகத்தில் எஸ்.ஐ.பாலு நெஞ்சில் அடிபட்டு மயங்கியிருக்கிறார். உடன் வந்த ஏட்டு பொன்.சுப்பையாவின் கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைகாக ஏரல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே பாலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஏட்டு பொன்.சுப்பையாவுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. தகவலறிந்தவுடன் தாமதமில்லாமல் ஏரல் காவல் நிலையம் வந்த எஸ்.பி.ஜெயக்குமார், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே முருகவேல் நேற்று (01.02.2021) விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். பலியான எஸ்.ஐ.பாலுவுக்கு வயது (56) தூத்துக்குடி பக்கமுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சார்ந்தவர். திருமணமாகி, மனைவியும் ஒரு மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், உடற்கூறு செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலுவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், தென்மண்டல ஐ.ஜியான முருகன், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் முடிவைத்தானேந்தல் கொண்டு வரப்பட்டு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஆட்டோ கொண்டு மோதி எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.