தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், ஆகியோரையும் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்கள் மீது இரண்டு கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்
இதில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து எஸ்.ஐ ரகு கணேஷ் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் வழியாக தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை, கோவில்பட்டி அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கா் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்ட விசாரணையில் நான்கு போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் போகப் போக இன்னும் நிறைய விஷயங்கள் தொிய வரலாம்" என்றார்.
நேற்று இரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷை அதிரடியாகக் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், இரவோடு இரவாக தலைமைக் காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் உள்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.