Skip to main content

தூத்துக்குடியில் தீவிரவாதிகளை சுடும் துப்பாக்கியை பயன்படுத்திய போலீசார்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

நாட்டு எல்லைகளில் தீவிரவாதிகளை சுட்டு கொல்ல பயன்படுத்தப்படும் அதிநவீன துப்பாக்கியை வைத்து தூத்துக்குடியில் மக்களை போலீசார் சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி, மக்களை சுட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறை விதிமுறைகள் அடிப்படையில், ஒரு போராட்டத்தை ஒடுக்க கூறும் வழிமுறைகள் இவைதான்.

Police used a bulletproof gun in Thoothukudi up to 800 meters

 



1) போராட்டக்காரர்கள் கலைந்து போக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
2) எச்சரித்த பிறகும் கலைந்து போகவில்லை என்றால், கண்ணீர் புகை குண்டு வீசலாம்
3) கண்ணீர் புகைக்கும் கூட்டம் கலையாவிட்டால், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கலாம்
4) அப்படியும் கூட்டம் கலைய மறுத்தால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடலாம்
5) ஆபத்து ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானால் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுடலாம் என்கிறார்கள்.

ஆனால், தூத்துக்குடியில் நெஞ்சு மற்றும், தலையை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறை மீது புகார் எழுந்துள்ளது. மேற்கூறிய வழிமுறைகளை காவல்துறை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி குறித்தும் புதிய தகவல்கள் வெளியே வந்துள்ளன. Insas - SLR வகை துப்பாக்கியை வைத்து போலீசார் குறி பார்த்து சுட்டதாகவும், இந்த வகை துப்பாக்கிகள், ஒரே நேரத்தில் 30 குண்டுகளை வெளியிட கூடியவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. எல்லைகளில் தூரத்தில் நடமாடும் தீவிரவாதிகளை சுட இதுபோன்ற துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதிகபட்சம் 800 மீட்டர் தூரம் வரை குண்டு பாயக்கூடியதாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டு பயணித்து இலக்கை தாக்க கூடியது. இதை வைத்தே, அந்த வகை துப்பாக்கியின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும். 

இந்த வகை துப்பாக்கிகளை கலவர இடங்களில் பயன்படுத்த அனுமதியில்லை. ஆனால், தூத்துக்குடியில் இந்த துப்பாக்கியை போலீசார் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

சார்ந்த செய்திகள்