டாஸ்மாக் ஊழியரிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை இரண்டு மணி நேரத்தில் அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்துள்ளனர் நன்னிலம் போலீசார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள வீதிவிடங்கன் அரசு டாஸ்மாக் கடையிலிருந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை செய்யப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டு வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியர் தட்சிணாமூர்த்தி நன்னிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு, தட்சிணாமூர்த்தியின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளி தாக்கிவிட்டு அவரிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரத்து 470 ரூபாயை பறித்துச் சென்றனர். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறை ஆய்வாளர் சுகுணா வழக்குப் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலோடு தனி டீம் அமைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பாண்டிச்சேரி பகுதியில் ரமேஷ், இளையராஜா, சேவாக், அரவிந்தன், அருள் ஜீவா, முரளி உள்ளிட்ட ஆறு பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்த 8 லட்சத்து 54ஆயிரத்து 470 ரூபாய் ரொக்க பணத்தையும் மீட்டுள்ளனர்.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரில் முரளி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும், இளையராஜா பாண்டிச்சேரியை சேர்ந்தவன் என்பதால் அவர்களுக்கும் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் எப்படி தொடர்பு? இதற்கு முன்பு இதுபோன்ற குற்றங்களில் இவர்களின் கைவரிசை இருக்கிறதா? இவர்களுக்கு பின்னால் இன்னும் யார் யார் இருக்கிறார்கள். உட்கிராமத்தில் இருந்து வரும் டாஸ்மாக் ஊழியரை இவர்களால் எப்படி டார்கெட் செய்ய முடிந்தது என்கிற பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.