Published on 04/05/2020 | Edited on 04/05/2020
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பைப் லைன் உடைந்து கச்சா எண்ணெய் தோட்டத்தில் புகுந்ததால் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள 53 சிமிழி கிராமத்தில் சங்கரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பல வகை மரங்கள் மற்றும் அதற்கு இடையில் கத்திரி, மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார்.
இந்தசூழலில் காப்பனாமங்கலம் எண்ணெய் கிணற்றிலிருந்து கொரடாச்சேரி பகுதியில் உள்ள செட்டிசிமிலிக்கு ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் மூலமாக கச்சா எண்ணெய் கொண்டுசெல்லப்படுகிறது. இதில் சங்கரன் தோட்டத்தில் திடிரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணை தோட்டத்திற்குள் பீரிட்டு அடித்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு பதறியபடி குடவாசல் போலீசாருக்கும், குடவாசல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்துவந்து அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். தகவலறிந்து வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணெய் செல்லுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் இதேபோன்று பல்வேறு பகுதியில் எண்ணெய் குழாய் விவசாய நிலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கமாகவே மாறிவிட்டது உடைப்பு ஏற்படுவதும் அதனை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் அவசர கதியில் சரி செய்வதும் தொடர்கதையாகிவிட்டது. நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.