திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதுக்குடி, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவரது மனைவி தேவிகா. இவர்கள் மன்னார்குடி அருகே வாய்கால் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். தேவிகா மன்னார்குடி அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தேவிகாவின் செல்போனுக்கு அடிக்கடி கால் வருவதும், வாட்ஸ் ஆப் மெசேஜ் வருவதுமாக இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த கணவர் ஜெயகாந்த் தேவிகாவின் செல்போனை அவருக்கு தெரியாமல் பார்த்துள்ளார். அதில் தேவிகாவின் சகோதரர் முருகேசன் தேவிகாவின் செல்போனுக்கு ஆபாசமாக படங்கள் அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த ஜெயகாந்த் அது குறித்து தேவிகாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த தேவிகாவும், அவரது சகோதரர் முருகேசனும், முரளிதரனும் சேர்ந்து ஜெயகாந்தை கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய ஜெயகாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி இனி வாழக்கூடாது என விரக்தியடைந்து, கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அந்த கடிதத்தில் "தேவிகாவும் அவரது சகோதரர் முருகேசனும் தகாத உறவு வைத்திருந்ததாவும், அதை தெரிந்து கொண்ட என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தேவிகாவும், அவரது சகோதரர் முருகேசனும், முரளிதரன் என்பவரும் கொடூரமாக தாக்கினர், இதனால் மன உளைச்சல் அடைந்துவிட்டேன். என்னை தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தனது பெயரில் உள்ள வீட்டிற்கு தனது அம்மா மற்றும் அப்பா ஆகியோருக்கு மட்டுமே உரிமை உள்ளது, வேறு யாருக்கும் உரிமை கிடையாது" என திருமக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.