ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம். தமிழக அரசு ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்தால் தான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அற்புதம்மாள்.
திருவாரூரில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அப்போதுதான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசை குறை கூற முடியாது.
7 பேர் விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம். எனது மகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரி மற்றும் உச்சநீதிமன்றமே தெரிவித்த பிறகும் ஆளுநர் ஏன் கையெழுத்திடவில்லை என புரியவில்லை. சட்டத்தை வணங்கி 28 ஆண்டுகளாக தண்டனை வகித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.