திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கிலும், பௌர்ணமி, சித்திரை மாத பௌர்ணமி, கார்த்திகை மாத தீபத்திருவிழா, தை மாத திருவூடல் விழா போன்ற விழாக்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் குவிவார்கள்.
கரோனா பரவலை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் வழிப்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. மற்றப்படி ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஊழியர்கள் வந்து தங்களது பணியை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 24ந்தேதி பலத்த மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்த பின் இரவு நேர பூஜைக்காக கோயிலுக்குள் இருந்த சிவாச்சாரியர்கள், கோயில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம், அந்த மழைக்கு கோயிலுக்குள் அதிலும் கொடிமரம் அமைந்துள்ள பிரகாரத்தில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மழை பெய்யும்போது கோயில் வளாகத்தில் விழும் மழைநீர் குளத்துக்கு போகும்படி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் கோயிலுக்குள் தண்ணீர் தேங்கி நின்றது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி விவரம் அறிந்த ஊழியர்கள் பேசும்போது, கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தார் சாலை உயரம் உயர்த்தி போடப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் எல்லாம் கோயிலுக்குள் வருகிறது. அப்படி வந்த தண்ணீரால்தான் கோயிலுக்குள் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றார்கள். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செய்த தவறாமல் அண்ணாமலையார் கோயில் பாதிக்கப்பட்டுள்ளது.