குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் சுற்று நேற்று (22.05.2024) நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் 3 வது மற்றும் 4 வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளசி 17 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், கிரீன் 27 ரன்களும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களும், ரஜத் படிதர் 34 ரன்களும், லாம்ரர் 32 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் சார்பில் காட்மோர் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 45 ரன்களும், சஞ்சு சாம்சன் 17 ரன்களும், துருவ் ஜுரெல் 8 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்களும் எடுத்தனர். பாவெல் 16 ரன்கள எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டு இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி நாளை (24.05.2024) சென்னையில் நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் (26.05.2024)) கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது.