திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் ஜனவரி 13-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்றும் மற்ற நாட்களில் எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை. யாரும் விழா நடத்த அனுமதி கேட்க வேண்டாம். தடையை மீறி எங்காவது எருது விழா நடத்தினால் விழாக்குழுவினர் மற்றும் எருது உரிமையாளர் உட்பட அதில் கலந்து கொள்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
அதேபோல் பிரபல சுற்றத்தலமான சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பொங்கல் தினங்களில் சாத்தனூர் அணைக்கு பொதுமக்கள் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையில் காணும் பொங்கலன்று மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடாது என்பதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.