திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியை மட்டுமல்ல 2,668 அடி உயரமுள்ள மலையையும் மக்கள் கடவுளாக வணங்குகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதுவே கார்த்திகை மாத மகாதீபத்தன்று 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இது சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பிரகாசமாகத் தெரியும். இந்நாளில், கிரிவலம் வருவது, மலையேறி தீபம் ஏற்றப்படும் உச்சியை வணங்கிவிட்டு வருவது என்பது பக்தர்களின் பழங்கால நடைமுறை.
கரோனாவால் இந்தாண்டு தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் வரவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உள்ளுர் பக்தர்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உள்ளுர்வாசிகள் தங்கள் வீட்டில் இருந்து தொலைக்காட்சி, யூ-டியூப் மற்றும் நேரடியாகத் தீபத்தைக் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் வர முயற்சி செய்வார்கள் என்பதால் கிரிவலப்பாதை முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்தின் அனைத்துப் பாதைகளிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 28 -ஆம் தேதி நள்ளிரவு முதல், நகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, அநாவசியமாக யாராவது வீட்டில் இருந்து வெளியில் வந்தால் எச்சரித்துத் திரும்ப வீட்டுக்கு அனுப்பிவைக்கச் சொல்லி காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நவம்பர் 29 -ஆம் தேதி தீபத்திருவிழா, நவம்பர் 30 -ஆம் தேதி பௌர்ணமி என்பதால் பக்தர்கள், நவம்பர் 30 -ஆம் தேதி கிரிவலம் வருவார்கள் என்பதால், அன்றும் கிரிவலம் வரத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மலை உச்சியில் 11 நாட்கள் தீபம் எரியும். இந்த நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் வந்தால், என்ன செய்வது என்கிற கேள்வி காவல்துறை அதிகாரிகளிடத்திலே எழுந்துள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்கிற ஆலோசனை, அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.