திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகப்பெரியது. தமிழகத்தில் எந்தக் கோவிலும் இப்படியொரு பெருவிழா நடப்பதில்லை. தீபத்திருவிழாவைக் காண தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். தீபத்திருவிழாவிற்கு மட்டும் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீபத்திருவிழாவிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையில் 12097 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது என முடிவு செய்துள்ளனர். 600 தீயணைப்பு வீரர்கள் 26 தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்கும்.
திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் 9 சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்குகின்றனர். கோவில், நகரம், கிரிவலப்பாதை, தற்காலிக பேருந்து நிலையம் மக்கள் கூடும் இடங்களில் 500 சிசிடிவி கேமராக்கள் மூலமாகக் கண்காணிப்பு பணியைச் செய்யவுள்ளனர். 7 ட்ரோன் கேமராக்கள் வழியாக நகரத்தைக் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள் எண்ணிக்கையை காவல்துறை உயர்த்திக்கொண்டே வருகிறது. இவ்வளவு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினாலும் அவர்களுக்குச் சரியான வழிகாட்டல்களை, அறிவுரைகளை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் வழங்குவதில்லை. பாதுகாப்புப் பணியில் சாலைகளில் இருக்கும் போலீசார், உள்ளூர் மக்களிடம் மோதல் போக்கிலேயே இருக்கிறார்கள். ஆட்டோக்களுக்கு பயந்துகொண்டு நகரத்தின் பெரும்பாலான வீதிகளை அடைத்து விடுகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும்போது அங்குப் பாதுகாப்பு என்கிற பெயரில் உள்ள போலீசாருடன் காரசார வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கை. இந்தாண்டும் அதிகளவு காவல்துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலமாக உள்ளூர் மக்களுடன் எந்த விதமான மோதல்கள் நடக்கப் போகிறதோ எனக் கவலை அடைகின்றனர்.