திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை செய்யார், ஆரணி பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. செய்யார் தொகுதியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும், ஆரணி நகரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை, பேரணி என நடத்தினர்.
இந்நிலையில் பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடையடைப்பு, கோரிக்கை மனு வழங்கல் என நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. ஆரணி தாலுக்காவில் நடைபெற்ற அக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு மனுக்களை வாங்கிய அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம், ஆரணி நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும், அது ஆரணி மாவட்டமாக இருக்கும் என்று கூறினார்.
அமைச்சர் வாக்குறுதி தந்திருப்பதால் நிச்சயம் அது நடக்கும் என ஆரணி, வந்தவாசி, செய்யார் பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்களது பகுதி மாவட்ட தலைநகராக அமைய அமைச்சர் தடைக்கல்லாக இருக்கிறாரே என செய்யார், வந்தவாசி பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் அமைச்சரின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்கின்றனர் அதிமுகவினரே.
மாவட்டம் பிரிக்கப்படும் என அமைச்சரே வாக்குறுதி தந்துள்ளதால், எப்போது பிரிக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. முதலமைச்சர் தமிழகம் திரும்பியதும் அதுப்பற்றி அவரிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளாராம் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன்.