-மகேஷ்
கோவில் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் பூச்செடிகள், வாழைகள் நடுவதற்காக சுத்தம் செய்தபோது, தங்கப் புதையல் கண்டெக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திருச்சி திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, கடப்பாறையால் குழி தோண்டிய போது, வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனையடுத்து மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து ஊழியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில் அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன. அந்த பெட்டகத்தில் 504 தங்கக்காசுகள் இருந்தன. இது 1 கிலோ 704 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், தங்கக்காசுகள் ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.