திருத்தணி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி +2 படித்துவந்தார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண், “மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மற்ற விவரங்கள் குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்த பின் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. வழக்குப் பதிவு செய்த பிறகு அதை நாங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்போம். அவர்கள் விசாரணையைத் தொடங்குவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை மாணவியின் உடற்கூராய்வு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டு, பகல் 12 மணி அளவில் முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், மாணவியின் பெற்றோர், ‘மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை உடனடியாக சொல்ல வேண்டும்’ என வலியுறுத்தி உடலை வாங்க மறுப்பு தெரிவித்துவந்தனர். அதன்பின் காவல்துறையினர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் உடலை அவரது சகோதரர் மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்த செல்லப்படுகிறது.