பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் பல தரப்பில் இருந்து படத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள திரையரங்கு ஒன்றியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, அண்ணா திமுக ஒருங்கிணைப்புக் குழு புகழேந்தி மற்றும் கட்சித் தொண்டர்கள் தங்கலான் படத்தைப் பார்த்துள்ளனர்.
படம் பார்த்த பிறகு பேசிய திருமாவளவன், “தங்கலான் மிகவும் சிறப்பான படமாக அமைந்துள்ளது. மிராசுதாரர்களிடமும், பிரிட்டிசார்களிடமும் வேலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் தொழிலாளர்கள் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளானார்கள், இறுதியாக கோலார் தங்க வயலில் தங்கத்தை கண்டார்கள் என்பதை இயக்குநர் ரஞ்சித் மிகவும் அருமையாக, திறமையாகப் படமாக எடுத்து உள்ளார். படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இயக்குநர் ரஞ்சித்தின் திறமையைப் பாராட்டுகிறேன். இதில் மிகவும் சிறப்பு அண்ணா திமுகவைச் சார்ந்த புகழேந்தியோடும், நிர்வாகிகளுடனும் திரைப்படத்தைப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவுக்கு எனது பாராட்டு”என்றார்.
இதையடுத்து பேசிய புகழேந்தி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதையைக் குறிப்பிட்டு “கோலார் தங்க வயல் தொழிலாளர்கள் கடும் உழைப்பைப் படமாக இயக்குநர் ரஞ்சித் உருவாக்கி சரித்திரம் படைத்திருக்கிறார். அன்பு சகோதரர் திருமாவளவனுடன் இணைந்து இந்த படத்தைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்வாகிகளுடனும் இந்த படத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதில் நடித்துள்ள கதாநாயகன் விக்ரம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இது போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்” எனப் பாராட்டினார்.