திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கக் கூடிய சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்போனை வைத்து சிலைகளுக்கு முன்பு செல்ஃபி எடுப்பது, அபிஷேகம் செய்வதை வீடியோ எடுப்பது போன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, “சில அர்ச்சகர்கள் விதிமுறைகளை மீறி சிலைகள் முன்பு போட்டோ எடுத்து யூடியூப் உள்ளிட்டவற்றில் பதிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் என்ன சத்திரமா? தமிழகத்தில் உள்ள கோவில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலில் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மட்டும் சாமி சிலைகள் முன்பு செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவில்கள் ஒன்றும் சுற்றுலாத்தலங்கள் அல்ல. கோவிலுக்கு வருபவர்கள் நாகரீகமாக உடை அணிய வேண்டும். டீ சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் உடன் கோவிலுக்கு வருவது வேதனையளிக்கிறது.” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.