சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவின் முக்கிய திருவிழாக்களான, தேர்த்திருவிழா இன்றும் (27ம் தேதி) நாளை 28-ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், மிகவும் எளிய முறையில் ஆனி திருமஞ்சன திருவிழாவை கோவிலுக்கு உள்ளே நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 150 தீட்சிதர்களுக்கு மட்டும் தரிசனவிழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து தீட்சிதர்களுக்கும் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும் அந்த சோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தீட்சிதர்களுக்கு நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு உள்ளேயே மருத்துவர்கள் குழுவினர் கொண்டு டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெஸ்ட் எடுத்த 150 பேரில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். இன்று (27ம் தேதி) தேர்த் திருவிழாவும், நாளை (28ம் தேதி) தரிசன விழாவும் நடைபெறும் நிலையில், இரண்டு தீட்சிதர்களுக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 5 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து திருவிழாவிற்கான பூஜைகள் நடத்த அனுமதிக்கபட்டிருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.