அரியலூர் அருகே உள்ளது வெங்கட்ட ரமணபுரம். இந்த ஊரில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஒரு வீட்டின் கதவின் பூட்டை எந்தவித பயமுமின்றி மிகவும் துணிச்சலோடு கோடாரி கொண்டு உடைத்துக்கொண்டு இருந்தார் ஒரு வாலிபர்.
அந்த வழியே வந்த சிலர் தற்செயலாக அதை பார்த்தனர். சம்பந்தமே இல்லாத ஒரு நபர் இந்த வீட்டின் பூட்டை உடைப்பது ஏன் என்று யோசித்தவர்கள் அதைகண்டு திடுக்கிட்டனர். உடனடியாக ஒன்று திரண்ட ஊர் மக்கள், அவரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அந்த வீட்டில் திருடுவதற்காக பூட்டை உடைத்ததை அந்த திருடன் ஒத்துக்கொண்டான். உடனடியாக ஊர் மக்கள் அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பொதுமக்களால் பிடித்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த திருடனை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அந்த நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் முருகன் என்பதும் இவர் திருவாரூர், நாகை, தஞ்சை, அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு அவ்வப்போது சிறைக்கு சென்று வருபவர் என்றும் தெரியவந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று பட்டப்பகலில் மீன்சுருட்டியை சேர்ந்த தலைமையாசிரியர் கணேசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளார். மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் செந்தில்முருகன் திருடி சென்றது கண்டுபிடித்து அவனை கைது செய்து திருடுபோன பொருட்களை ரெக்கவரி செய்துள்ளனர். பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடுவது செந்தில்முருகனின் நிரந்தர தொழில் என்கிறார்கள் காவல்துறையினர். அரியலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுபோயுள்ளது. அந்த திருட்டுக்கும் செந்தில்முருகனுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.