திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவும், செஸ் போட்டி துவக்கி வைக்க விழாவும், இன்று (23/07/2022) நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு 36 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சன்றிதழ்கள், பாராட்டு கோப்பை மற்றும் ஊக்கத் தொகையும், 83 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கதொகையும், 25 அரசு உதவிபெறும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் பலகைளையும் வழங்கினார்.
அதன்பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்புதான், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சாதனை படைக்கும் வகையில், அதிகளவிலான கடனுதவிகளை தனது கரங்களால் வழங்கினார். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் செஸ் ஒலிம்பியாட்- 2022 சுடர் கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். உலகத்தில் சிறந்த இடமாக தமிழகத்தைச் சார்ந்த மாமல்லபுரத்தினை தேர்வு செய்துள்ளது, நமது மாநிலத்திற்கு கிடைத்த பெருமை. தமிழக முதலமைச்சர் செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரம் தொகுதி அரசு பள்ளி 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு மற்றும் அரசு உதவிபெறும் 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு செஸ் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டிகள் நடத்த முடிவு செய்து, அனைத்து பள்ளிகளுக்கும் செஸ் பலகை வழங்கப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கபாடி போட்டியில் தொடர்ந்து 7 ஆண்டுகள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றி கொள்ள வேண்டும். படிக்கின்ற மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டில் முன்னேற வேண்டும். தமிழக முதலமைச்சர் கல்விக்காக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.