தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட சமத்துவபுரங்களை சீரமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் குடியிருப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆத்தூர் ஒன்றியம் சீவல் சரகு ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை ரூபாய் 1 கோடியே 62 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள் கடந்த மே மாதம் 11- ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சமத்துவபுரத்திற்கு சென்று வீடுகளை சீரமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். மேற்கூரை முழுவதும் பழுதடைந்த வீடுகளை முழமையாக சீரமைக்க உத்தரவிட்டதோடு, சீரமைப்பு பணிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருப்தியடையும் வகையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் எண்ணத்தில் உருவான திட்டம்தான் இந்த சமத்துவபுரம். கிராமங்களில் சமத்துவபுரம் கொண்டு வந்ததற்கான காரணம் கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே சாதி வேற்றுமைகளை மறந்து சமத்துவமாக இருந்தால், அது நகர்புரங்களுக்கும் வரும் என்ற எண்ணத்தில்தான் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
இன்று அவர் வழியில் தமிழகத்தை நல்லாட்சி செய்து வரும் தங்கத் தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவபுரங்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். மக்கள் எந்தவித ஐய்யப்பாடுமின்றி வீடுகளில் தங்கிக் குடியிருக்கும் அளவிற்கு வீடுகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். காரணம் கிராமங்கள் அனைத்தும் சமத்துவபுரங்களாக மாறி தமிழகமே ஒரு சமத்துவபுர நாடாக மாற வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் எண்ணம். தி.மு.க.வின் உயிர் மூச்சாக கருதி சமத்துவபுரத்தைப் பாதுகாக்கும்" என்றார்.
இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் அனுராதா, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.