பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில்,அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.