Skip to main content

அவருக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும்-ஸ்டாலின் வலியுறுத்தல் 

Published on 23/08/2020 | Edited on 24/08/2020
Is there no protection in this regime for the life of the Panchayat President? -Stalin's question

 

கோவையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை சமூக பெயரைக் குறிப்பிட்டு திட்டியதாக எழுந்த புகாரில் தற்பொழுது ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் நெகமம் காவல்துறையினர் தற்போது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா  ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சரிதா. இவர் கடந்த 21ஆம் தேதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்கள் ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், ஊராட்சி மன்றத்தில் இருக்கக்கூடிய பலகைகளில் தனது பெயர்  இடம்பெறக்கூடாது என கூறி சமூகத்தை குறிப்பிட்டு தன்னை திட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், நீங்கள் நேரடியாக நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் நெகமம் காவல் நிலையத்தில் சரிதா புகார் கொடுத்த நிலையில், அவரது புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் தற்போது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது புகாரின் பேரில் காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் மக்கள் பணியில் ஈடுபடும் எனக்கு இதுபோன்ற இடையூறுகள் வரக் கூடாது எனவும் விருப்பத்தை தெரிவித்துள்ளார் பெண் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா. 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சரிதாவுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில், சாதியரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கும் ஆளாகியிருக்கும் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா கோவை மாவட்ட காவல் துறையில் புகார் அளித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? அவரை மிரட்டுபவர் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்