தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அதனை நிரப்பவே தான் அரசியலுக்கு வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
திருச்சியில் கர்ப்பிணி உஷா இறந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் குறித்து டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட கருத்து தனக்கு தெரியாமல் உதவியாளர் பதிவு செய்து விட்டதாக கூறி எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அவருக்கு தெரியாமல் நடந்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியதுதான். தந்தை பெரியார் ஒரு பொக்கிஷம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர்.
தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிலைகளின் மீது பெயிண்ட் ஊற்றினாலோ, சேதப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலையை யாராவது சேதப்படுத்தப்போகிறார்கள் என்கிற தகவல் வந்தால் கூட அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ளும்.
எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என்று நடிகர் ரஜினி கூறியது அவரது கருத்து. இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி கூட எம்.ஜி.ஆர். ஆட்சிதான். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டார். மறைந்த இரு தலைவர்களும் இறுதி வரை மக்களுக்காக பாடுபட்டனர். எனவே தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என்று கூறினார்.