நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியாக வசித்துவரும் மூதாட்டிக்கு மின் பயன்பாட்டு கட்டணம் ரூ.25,071 செலுத்தக்கோரி ரசீது அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவகி என்ற மூதாட்டி தனியாக வசித்துவருகிறார். இவரது வீட்டில் மூன்று மின்விளக்குகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. சமீபத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு மின் பயன்பாட்டு கட்டணமாக ரூ.25,071 செலுத்தக்கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதேபோல அவரது வீட்டிற்கு அருகே இருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் அதிகப்படியான கட்டணம் கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவகியும், சம்பந்தப்பட்ட மற்றவர்களும் மின்வாரிய அலுவலகத்தில் சென்று புகாரளித்துள்ளனர்.
இது குறித்து கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் நடத்திய விசாரணையில், மின் கணக்கீட்டாளர் ரமேஷ் நேரடியாக வீட்டிற்கு சென்று கணக்கிடாமல் அவராகவே தோராயமாக கட்டண நிர்ணயம் செய்தது அம்பலமானது. இதையடுத்து, ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.